Thursday, January 15, 2015

ராஜ வைத்தியம்



ராஜ வைத்தியம்
சித்த மருத்துவத்தில் ராஜ வைத்தியம் என்ற முறை உள்ளது. இந்த முறை பெரும்பாலும் அந்த காலத்தில் அரசர்களுக்கு தான் பார்க்கப்பட்டது. பிற்காலத்தில் பெரும் செல்வந்தர்களுக்கும் பார்க்கப்பட்டது. இது ஒரு மென்மையான முறை. உதரணத்திற்கு சளி தொல்லை இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதற்கு தும்பை பூவின் சாறு மூக்கில் விடுவது ஒரு மருத்துவ முறை உள்ளது. இது ஒரு முரட்டு வைத்தியம். இதனால் மூக்கில் இருந்து சளி வெளியேறும். மூக்கில் தும்பை சாறு விடப்பட்ட நபர் மிகுந்த அவதிக்குள்ளாவார். இதையே அரசருக்கு இவ்வாறு செய்தால் மூக்கில் தும்பை பூவின் சாறு விட்ட வைத்தியரை தலை வெட்டவும் வாய்ப்பு உள்ளது. அவ்வளவு முரட்டு வைத்தியம் அது. தும்பை பூ சாறு மூக்கில் விட்டவர்களுக்கு தெரியும் அதன் தன்மை. இதற்கு அரசருக்கு எளிமையான திரிகடுகு லேகியம் இனிப்பாக தரலாம். தும்பை பூ இலவசமாக கிடைக்கும். ஆனால் லேகியதிற்கு தேவையான அனைத்து சரக்குகளையும் முறையாக சுத்தி செய்யவேண்டும். பிறகு காய்ச்ச வேண்டும் பதம் சரியாக இருக்கவேண்டும். நிறைய மெனக்கெட வேண்டி இருக்கு. செலவும் நிறைய ஆகும். ஆனால் இது மென்மையான முறை. இது போன்ற முறைகளை அரசருக்கு கையாளவேண்டும்.
சரி அரசருக்கு வயிற்று போக்குக்கு மருந்து கொடுக்க வேண்டும். பொதுவாக பேதி மருந்து மாத்திரையாகவவோ, சூரணமாகவோ, விளக்கெண்ணையாகவோ, மெழுகாககவோ கொடுப்பார்கள். இவை அனைத்துமே கிட்டத்தட்ட முரட்டு வைத்தியம் தான். எண்ணையை வெறும் வயற்றில் குடிப்பதற்கு சிரமம் தான். சில நேரங்களில் வாந்தி வரவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு என்ன செய்வார்கள் என்றால்
சுத்தி செய்த நேர்வாளம் - 100 கிராம்
சுத்தமான பால் - 4 லிட்டர்
4 லிட்டர் பாலில் நேர்வாளம் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். 2 லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு வடிகட்டி அதில் வெண்ணை எடுத்து அதில் இருந்து நெய் எடுக்கவேண்டும். அந்த நெய்யில் மல்லி பூக்களை சுமார் ஒரு ஜாமம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரசருக்கு அந்த பூவை முகர்ந்து பார்க்க கொடுக்க வேண்டும். ஒரு பூவை ஒரு முறை முகர்ந்தால் அரசருக்கு ஒரு முறை வயிற்று போக்கு ஏற்ப்படும். மீண்டும் முகர்ந்தால் மீண்டும் ஒரு முறை வயிற்று போக்கு ஏற்படும். இது மிகவும் மென்மையான முறை. இந்த மாதரி முறைகளுக்கு ராஜ வைத்தியம் என்று பெயர்.
அதே ஒரு மல்லி பூவை குழந்தைகளுக்கு கால் பாதத்தில் அல்லது தொப்புளில் வைத்து சிறிது நேரம் கட்டினால் போதும் சிறிது நேரத்தில் வயிற்று போக்கு ஏற்ப்படும். இதுவும் மென்மையான முறை தான். நம்முடைய மருத்துவத்தில் நிறைய இருக்கிறது ஒவ்வொன்றாக சேகரித்து பகிர்கிறேன். தெரிந்தவர்களும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பயணிப்போம் . . .

1 comment: