Tuesday, October 1, 2013

சிவனும் இலுப்பையும் !

சிவனும் இலுப்பையும் !
'சித்திரையில் மழை பெய்தால்... சிவனுக்கு ஆகாது!’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, 'இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால்தான் சிவபெருமானுக்கு மனம் குளிரும்’ என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில்தான் இலுப்பை மரத்தில் பூக்கள் பூக்கும். அந்த சமயத்தில் மழை பெய்தால், பூக்கள் உதிர்ந்து விதைகள் உருவாகாமல் போய் விடும். சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவதற்கான இலுப்பை எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்பதால்தான் இப்படியரு பழமொழி.
இன்றும் ஆம்பலாபட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இலுப்பை எண்ணெயில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. அதைப் பற்றி பேசிய கோயில் பூசாரி முருகையன், 'இந்த எண்ணெயில தீபம் ஏத்தினா, ரொம்ப நேரத்துக்கு நின்னு விளக்கு எரியும். இப்போ ஒரு லிட்டர் இலுப்பை எண்ணெய் 180 ரூபாய் வரை விலை போகுது'' என்றார்.
கோயிலுக்கும் இலுப்பைக்கும் உள்ள தொடர்பு எண்ணெயோடு நின்று விடவில்லை.... கோயிலின் கதவுகள், தூண்கள், உத்தரம், தேர் என்று பல்வேறு உபயோகங்களுக்கும் இலுப்பைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி தேர்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவநேசன் கூறும்பொழுது, ''தேக்கு போலவே இதுவும் வலிமையான மரம். பால்சத்து நிறைந்த இந்த மரத்தை கரையான் அரிக்காது. அப்படியே அரித்தாலும், கடைசியில் மண்ணாக மிஞ்சும் துகள்கள் மீது தண்ணீர் தெளித்தால், அதில்கூட பால் சத்து தங்கியிருக்கும். இதுதான் இலுப்பையின் அதிசய குணம்.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட தேர்கள்கூட, இன்றளவும் தமிழகக் கோயில்களில் திடமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சோழமண்டலத்தில் இருக்கும் கோயில்களுக்கு இந்த மரத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதியில இலுப்பை மரங்கள் நிறைய இருந்ததுதான் காரணம்.

தேரில் உள்ள சிம்மாசனம், தேவாசனம், நடவாசனம், உருதலம், பூதப்பார் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்களை இன்றைக்கும் இலுப்பையில்தான் செய்கிறோம். சுமார் 60 வருடங்களை கடந்த மரங்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறோம். அதுபோன்ற மரங்களில்தான் முழுமையாக வைரம் பாய்ந்திருக்கும். ஒரு கன அடி இலுப்பை மரம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. படகு செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உப்புத் தண்ணீரிலும் இது தாக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்'' என்று இலுப்பை பற்றி புகழ்ந்தார்.
தஞ்சை பெரியக் கோயிலில் அமைந்திருக்கும் அம்மன் சந்நிதியின் வாயிற் கதவுகள், இலுப்பை மரத்தால் செய்யப்பட்டவை... இன்றைக்கும்  பொலிவோடு திகழ்கின்றன. இவை உருவாக்கப்பட்டு சுமார் 400  வருடங்கள் இருக்கலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்

No comments:

Post a Comment