Tuesday, October 1, 2013

இலுப்பை மரங்கள்

'பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு..’

-இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.
இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்களெல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு.
எண்ணெய், மருத்துவ உபயோகம், தின்பண்டம் என பல வழிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரே மரம்... இலுப்பைதான். நிழல், காற்று, பூ, பழம், விதை என இன்னும் பல அற்புதங்களை அள்ளித் தந்து, அவர்களை நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வைத்துக் கொண்டிருந்த பெருமைமிக்க இலுப்பை மரங்கள், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம். ஊர் ஊருக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்த காலம் போய், பல கிராமங்களில் ஒரேயரு இலுப்பை மரத்தைக் கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது. 'இலுப்பை மரமா... அது எப்படி இருக்கும்?' என்று இன்றைய தலைமுறை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி அழிவின் விளிம்பில் உள்ள இலுப்பை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, விஜயன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பெரியவர்கள் சிலர்.
இந்த ஊரிலுள்ள சிவன் கோயில், மாரியம்மன் கோயில், அய்யனார் கோயில்... ஆகியவற்றுக்குச் சொந்தமான இடத்தில் இலுப்பை மரங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். புதிதாக நடவு செய்தும் வருகிறார்கள். அதனால் இந்த கிராமம் 'இலுப்பைத் தோப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான இலுப்பை மரங்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளைக் கடந்தவை என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. காலத்தை வென்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரத்தில் 12 அடி சுற்றளவு வரையுள்ளவையாக இருக்கின்றன.
இவ்வூரைச் சேர்ந்த 95 வயதைக் கடந்த முதியவர் ரெங்கசாமி சேனாதிபதி, இலுப்பையுடன் கலந்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
''சின்னப் புள்ளையா இருந்தப்ப இங்க நூத்துக்கணக்கான இலுப்பை மரங்கள் இருக்கும். பூவெடுக்குற சமயத்துல ஊரே இலுப்பைப் பூ வாசனையில் கமகமக்கும். சாயங்கால நேரத்துல ஏகாந்தமா இருக்கும். அந்தக் காத்தை சுவாசிச்சாலே நோய், நொடி அண்டாது.
வெளவால் தின்னு போடுற இலுப்பைக் கொட்டைகளை நாங்க பொறுக்கிட்டுப் போய் வெயில்ல காயவெச்சு உடைச்சு பருப்பெடுப்போம். அதை செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெய் எடுத்து கோயில், வீடுனு விளக்கேத்துறதுக்கு பயன்படுத்துவோம். இந்த எண்ணெயில வர்ற புகையை சுவாசிச்சா... உடம்புக்கு நல்லது.
ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்ன வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தோம்'' என்று நினைவலைகளில் நீந்தினார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த மூலிகை மருத்துவர் கதிரேசன், ''இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, வாயுக் கோளாறு... மாதிரியான எல்லா பிரச்னைகளுக்கும் இலுப்பை எண்ணெய்தான் மருந்து. புண்ணைக்கூட இந்த எண்ணெய் ஆத்திடும். ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.
வெளிர் மஞ்சள் நிறத்துல இருக்குற இலுப்பைப் பூ கூட அற்புதமான மருந்து. இதை மூணு நாள் காய வெச்சு, நரம்பை நீக்கி, மண் சட்டியில வறுத்து சாப்பிட்டா... தோல் சம்பந்தபட்ட வியாதி, விரைவாத நோய் எல்லாம் குணமாயிடும். இலுப்பைப் பூ, கருப்பட்டி, சீரகம், மிளகையெல்லாம் போட்டு இடிச்சு, உருண்டையாக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தா... கணை நோய் நீங்கிடும். இதய நோய், பாம்புக்கடி, அசதி, ஆண்மைக் குறைவு, வாந்தி, பித்தம், காய்ச்சல்னு பல நோய்களுக்கு இலுப்பைப் பூவுல மருந்து தயாரிக்கறாங்க.

இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும். முடி கொட்டுறது நின்னுடும். இதை, சர்வரோக நிவாரணினே சொல்லலாம்'' என்று இலுப்பை புகழ் பாடினார்.
மர மீட்புக்குழுவைச் சேர்ந்த அண்ணாமலை, ''முன்ன கோயில் நிலங்கள்லதான் இலுப்பை மரங்கள் அதிகமா இருக்கும். அதனால அதை வெட்டுனா... தெய்வக் குத்தமாயிடும்னு பயம் இருந்துச்சு. அதனால, மரங்கள் பாதுகாப்பா இருந்துச்சு. காலப்போக்குல கோயில் நிலத்தையெல்லாம் ஆளாளுக்கு ஆக்கிரமிச்சுட்டாங்க. அதோட, அரசாங்கமும் பலவிதமான பயன்பாட்டுக்கு கோயில் நிலத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதால, அதுல இருந்த மரங்களையெல்லாம் வெட்டுனதுல இலுப்பை அழிஞ்சு போச்சு. மிச்சமிருக்குற மரங்களையாவது பாதுகாக்கணும்றதுக்காக 'இலுப்பை மரங்களை வெட்டக் கூடாது’னு ஊர்ல முடிவெடுத்திருக்கோம்.
வெளவால் மாதிரியான ஜீவன்கள் சாப்பிட்டு போடற கொட்டைகள் மூலமாவும் மரங்கள் முளைக்கத் தொடங்கியிருக்கு. ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கத்தோட முயற்சியால கோயில், பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம்னு பல இடங்கள்ல இலுப்பைக் கன்னுங்கள நடவு பண்ணி, வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆர்வத்தோடு வர்றவங்களுக்கு விதைகளை இலவசமா கொடுக்க தயாரா இருக்கோம்'' என்றார் ஆவல் பொங்க.

No comments:

Post a Comment